

பருத்தி விவசாயிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு தமிழக பருத்தி சிறப்பு அபிவிருத்தி திட்டத்தை அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) கோரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க பருத்தி அபிவிருத்தி ஆராய்ச்சி கழக தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகிலேயே மிகப்பெரும் ஜவுளி கேந்திரமாக தமிழகம் விளங்கி வருகிறது. ஆனால் பருத்தி மற்றும் செயற்கை இழை மூலப்பொருட்களுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களையே தமிழகம் நம்பியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பருத்தியை தமிழகத்துக்கு கொண்டு வர கிலோவுக்கு ரூ.6 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால், தமிழக ஜவுளி ஆலைகளின் போட்டி ஸ்திரத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
பஞ்சை பொறுத்தவரை தமிழகத்தின் தேவை ஆண்டுக்கு சுமார் 120 லட்சம் பேல்களாக இருக்கும் நிலையில், சுமார் 5 லட்சம் பேல் பஞ்சு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியை 25 லட்சம் பேல்களாக 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டத்தின் மூலமாக உயர்த்த முடியும். தமிழகத்தில் போதிய நிதியுதவி, கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும், விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காததாலும், தண்ணீர் பற்றாக்குறை, தொழிலாளர் பற்றாக்குறை காரணங்களாலும் பருத்தி உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
சைமா சார்பில் இந்திய பருத்தி கழகத்துடன் இணைந்து தமிழக அரசு திட்டத்தின் மூலம் 200 டன் கூடுதல் நீண்ட இழை பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியதுடன், தமிழக அரசு உதவியுடன் சுமார் 3500 பருத்தி எடுக்கும் கருவிகளையும் வழங்கியுள்ளோம். இந்தியாவில் பி.டி. ரக பருத்தி தொழில்நுட்பத்தை நீண்ட இழை பருத்திக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். சுமார் 97 சதவீத விவசாயிகள் இந்த ரக பருத்தியை சாகுபடி செய்வதால், இந்தியாவில் மிக கூடுதல் நீண்ட இழை பருத்தியில் 85 சதவீதம் வரை பற்றாக்குறை நிலவுகிறது. இந்த ரக பருத்தியை அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு இந்த ரக பருத்தியை உள்நாட்டில் உற்பத்தி செய்ய சிறப்பு திட்டங்களை விரைவில் அறிவிக்க உள்ளது.
சைமா சார்பில் அமெரிக்கா மற்றும் எகிப்து ரக பருத்தி பஞ்சுகளை விட சிறந்த பண்புகளைக் கொண்ட பருத்தி ரகங்களை உருவாக்கி சான்றிதழைப் பெற்று அபிவிருத்தி செய்யும் தருவாயில் உள்ளோம். தமிழக பருத்தி விவசாயிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தமிழக பருத்தி சிறப்பு அபிவிருத்தி திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்ய எங்களது சங்கத்துக்கு உரிய நிதியுதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.