நெகமம் கைத்தறி சேலைக்கு விரைவில் புவிசார் குறியீடு?
நெகமம் காட்டன் சேலைக்கு புவிசார் அங்கீகாரம் கேட்டு, புவிசார் குறியீடு பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, சேலம் பட்டு மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட 38 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 25 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகத்தில் பதிவு செய்து கொடுத்த வழக்கறிஞர் வ.சஞ்சய் காந்தி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
நெகமம் கிராமத்தில் 100 ஆண்டு களுக்கு முன்பு தனித்திறமை உடைய நெசவாளர்கள் கைத்தறி யில் காட்டன் சேலைகளை நெய்து வந்தனர். இச்சேலைகளின் தரம், வடிவமைப்பு, பல வண்ணங்கள் ஆகியவற்றால் கொங்கு மண்டலத் தில் புகழ்பெற்று விளங்கியது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக ‘நெகமம் காட்டன் சேலைகள்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சேலைகளுக்கு புவிசார் குறியீடு கேட்டு, 15 கைத்தறி நெசவாளர் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் சார்பில் புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பிக்கப் பட்டது. இதற்கு விண்ணப்ப எண் (766) தரப்பட்டுள்ளது.
தெலுங்கு, கன்னடம் பேசும் தேவாங்க சமூக மக்கள்,நூற்றாண்டுக்கு முன்பே பொள்ளாச்சி பகுதியில் குடியேறி, இச்சேலையை நெய்ய தொடங்கினர். 1942-ம் ஆண்டு முதன்முதலில் ‘வடமசேரி’ ராமலிங்க சௌடாம்பிகா தைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 1976-ல் சக்தி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் இதர கூட்டுறவு சங்கங்களும் நெகமம் கைத்தறி சேலை உற்பத்தியை தொடங்கின. நாளடைவில் இந்த சேலையின் தேவை அதிகரித்ததால் தற்போது பொள்ளாச்சி, சூலூர், கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலை வட்டங்களில் உள்ள கிராமங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
