

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டுமென, கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்த கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தானக் கழகம் ஆகியவை இணைந்து, கோவிட் தடுப்பு உதவி மையம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை அரசு மருத்துவமனைக்கு வழங்கியிருந்தன. இந்த கருவிகளை இயக்கி வைத்ததுடன், தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் (டிசிஓஏ) மூலம் வழங்கப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்பிலான ஆறுஸ்ட்ரெச்சர்களையும் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசனிடம் அவர் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றுவரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மூன்றாவது அலை கரோனா தொற்று பரவல் ஏற்படும் நிலை வந்தால், மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவற்றை தயார்படுத்தி, முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், சி.மூர்த்தி, கே.ரங்கராஜ், டி.ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். நடராஜன் கூறும்போது, "திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு, வரும் சட்டப்பேரவை நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரிலேயே அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும். கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.