

பெருந்துறை சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சுற்றுச்சூழல்துறை அமைச்சரிடம் பாதிக்கப்பட்டோர் மனு அளித்தனர்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து ஈரோட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் மையத்தில் 151 தொழிற்சாலைகளூம், பவானி சுற்றுவட்டார பகுதியில் 44 சாயத் தொழிற்சாலைகளும், சென்னிமலை பகுதியில் 24 சிறு சாயத்தொழிற்சாலைகளும், சத்தியமங்கலம் பகுதியில் 12 காகித தொழிற்சாலைகளும் உள்ளன.
தொழிற்சாலைகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில், தங்களது உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அடுத்த தலைமுறையினரை காக்கும் வகையில் இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வரும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுகளில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய சேலம் மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.மதிவாணன், ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோ.உதயகுமார், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் அமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனுவில், சிப்காட்டிற்கு நிலம் வழங்கியவர்களுக்கு 25 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள இழப்பீட்டினை வழங்க வேண்டும். சிப்காட்டில் சட்டவிரோதமாக செயல்படும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும். ஆலைகளில் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.