Published : 03 Jul 2021 03:14 AM
Last Updated : 03 Jul 2021 03:14 AM

மீனவர்களுக்கு கைகொடுக்கும் நெத்திலி கருவாடு வியாபாரம்: குமரியில் குவியும் கேரள வியாபாரிகள்

குளச்சல் கடலோர பகுதிகளில் நெத்திலியை உலர்த்தி கருவாடாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவ குடும்பத்தினர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்வாழ்வாதாரத்தை நெத்திலி கருவாடு காப்பாற்றி வருகிறது. நெத்திலி கருவாடு வாங்க கேரள வியாபாரிகளும் அதிகளவில் வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், கிழக்கு கடற்கரைபகுதிக்கு உட்பட்ட சின்னமுட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. மேற்கு கடற்கரை பகுதியான குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் தடைக்காலம் நீடிப்பதால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. அதேநேரம் கட்டுமரம், வள்ளம், பைபர் படகுகளில் கரையோர பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் உள்ளூரை தவிர்த்து வெளியூர்களில் வர்த்தகம் செய்ய முடியாமல் மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நேரத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், ராஜாக்கமங்கலம், இனயம், இரையுமன்துறை கடல் பகுதிகளில் நெத்திலி அதிகளவில் படிபட்டன. பிற மீன்களுக்கான தட்டுப்பாடை நெத்திலி மீன்கள் நிவர்த்தி செய்தன. 20 கிலோவுக்கு மேல் எடை கொண்ட ஒரு கூடை நெத்திலி மீன், 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. இது சில நாட்கள் தான். திடீரென நெத்திலி மீன் விலை குறைந்தது. ஒரு கூடை நெத்திலி மீன் 1,000 ரூபாய்க்குள் மட்டுமே விற்பனை ஆனது. இதனால் மீன்பிடி செலவுக்கு கூட பணம் கிடைக்காமல் மீனவர்கள் நஷ்டம் அடைந்தனர்.

இதை ஈடுகட்டும் வகையில் மீனவர்களின் குடும்பத்தினர் நெத்திலியை கருவாடாக்கி விற்கும்குடிசைத்தொழிலை வேகப்படுத்தினர். நெத்திலி மீன்களை கடற்கரை மணற்பரப்பில் உலர்த்தி காயவைக்கின்றனர். 3 நாட்கள் வரை வெயிலில் உலர்த்தப்பட்ட நெத்திலி கருவாடை உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்குகின்றனர். கேரளவியாபாரிகளும் அதிகம் வரத்தொடங்கியுள்ளனர். ஒரு கூடை நெத்திலி கருவாடு 2 ஆயிரம் ரூபாய்க்குமேல் விற்பனை ஆகிறது. மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x