Published : 03 Feb 2016 03:14 PM
Last Updated : 03 Feb 2016 03:14 PM

மரக்காணம் கலவர வழக்கில் நீதி வென்றது: ராமதாஸ் கருத்து

மரக்காணம் கலவர வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் நீதி வென்றுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மாமல்லபுரத்தில் 25.04.2013 அன்று நடைபெற்ற சித்திரைப் பெருநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய வன்முறை மற்றும் கலவரத்தில் செல்வராஜ், விவேக் ஆகிய இருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களில் செல்வராஜ் படுகொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதன்மூலம் அப்பாவி இளைஞர்கள் படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கிறது.

மரக்காணம் கலவரத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கம் முதலே கூறி வருகிறேன். மாமல்லபுரம் சித்திரைப் பெருவிழாவை மிகப்பெரிய அளவில் நடத்திக் காட்ட வேண்டும் என்பது மட்டுமே எங்களின் ஒற்றை இலக்காக இருந்தது. மாநாட்டிற்காக வந்தவர்கள் மீது மரக்காணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக தகவல் கிடைத்தவுடன் அதிர்ச்சியடைந்தேன்.

மாநாட்டிற்கு வந்த செல்வராஜ், விவேக் ஆகிய இருவர் மிகக்கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர், மாநாட்டிற்காக வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அருகிலுள்ள தோட்டங்களுக்குள் விரட்டியடித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர் என்ற செய்தி கேட்டவுடன் இதயத்தில் இடி தாக்கியதைப் போல உணர்ந்தேன்.

காவல்துறையினர் நினைத்திருந்தால் இந்த வன்முறையை தடுத்து, மாநாட்டுக்கு வந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பியிருக்கலாம். ஆனால், காவல்துறை அதிகாரிகள் சாதிய நோக்கில் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

ஆனால், உண்மையை அதிக நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது என்ற தத்துவத்தின்படி, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் உண்மை உலகிற்கு உணர்த்தப்பட்டுவிட்டது.

செல்வராஜ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள கழிக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், செந்தில்குமார், பாரிநாதன், ராஜா, ரகு, சேகர் ஆகிய 6 பேரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆவர்.

இந்த கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட விவேக் என்ற இளைஞரை படுகொலை செய்தவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதன்மூலம் பா.ம.க மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும், வீண்பழியும் விலகியிருப்பது நிம்மதியளிக்கிறது.

"பா.ம.க. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல. பா.ம.க.வின் செயல்பாடுகள் பற்றி அறிவார்ந்த, அர்த்தமுள்ள விமர்சனங்களை முன்வையுங்கள்... ஏற்றுக்கொள்கிறோம். மாறாக, பா.ம.க.வின் செயல்பாடுகள் அனைத்தையும் காமாலை கண் கொண்டு பார்த்து அவதூறு பழி சுமத்த வேண்டாம்" என்ற செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன்.

செல்வராஜ் கொலை வழக்கை போலவே, விவேக் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

இருவரின் குடும்பங்களுக்கும் அரசின் சார்பில் இதுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில் அவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x