Published : 03 Jul 2021 03:14 AM
Last Updated : 03 Jul 2021 03:14 AM

நெல்லையில் தாமிரபரணிக் கரையை அபாயகரமாக்கும் மருத்துவக் கழிவுகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை தொடங்கி உடையார்பட்டி செல்லும் சாலை வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆங்காங்கே பாதுகாப்பற்ற முறையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு சமவெளி பகுதிகளில் 126 கி.மீ பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்துக்கும் தாமிரபரணி தண்ணீர் தான் பயன்படுகிறது. இதனால் ஆற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மருத்துவக் கழிவு களும், இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகள் தண்ணீரில் கலப்பதால் மாசு ஏற்படுகிறது.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை தொடங்கி உடையார்பட்டி செல்லும் சாலை வரையில் தாமிரபரணி கரையில் ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் பொது இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. மருத்துவமனையின் அன்றாட மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள், களிம்பு போன்றவை கொட்டப்பட்டுள்ளன. இதுபோல் பல இடங்களில் இறைச்சிக் கழிவுகள் அதிகள வில் கொட்டப்பட்டுள்ளது. இக் கழிவுகளால் ஆற்றங்கரையோரம் மேயும் கால்நடைகளும் அபாயத்தை சந்திக்கின்றன.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அவர்கள் கூறும்போது, ‘‘ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டு செல்கிறார்கள். இது மனித குலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தீங்கான விஷயம். மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அபாயகரமான கழிவுகளை ஆற்றங்கரையில் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். நீராதாரங்களில் கழிவுகளை கொட்டுவோரை பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x