திருநெல்வேலியில்  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு,  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்,  மனோ தங்கராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.1,50,000 கோடி கடனில் தவிக்கும் மின்வாரியம்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Published on

தமிழக மின் வாரியம் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவிப்பதாகவும், கடனுக்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வட்டி கட்டப்பட்டு வருகிறது என்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் மின்விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

கடந்த சில ஆண்டுகளில் மின்வாரியத்தில் நிர்வாக சீர்கேட்டால் நடந்த இழப்பீடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று தவறான தகவலை தெரிவித்து வந்தனர்.

பொதுமக்கள் தடையின்றி சீரான மின்சாரம் பெறவேண்டும் என்பதற்காக சென்னையில் மின்னகம் என்ற சேவை மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்துக்கு இதுவரை 51 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் 45 ஆயிரம் அழைப்புகளுக்கு உடனடியாக தீர்வு எட்டப்பட்டுள்ளது. 88 சதவீதம் உடனடி தீர்வு காணப்பட்டிருக்கிறது.

கடந்த 9 மாதம் பராமரிப்பு பணிகளை முன்பிருந்த ஆட்சியாளர்கள் செய்யவே இல்லை. 10 நாட்களில் பணிகளை மேற்கொண்டுள்ளோம். அதில் 42 ஆயிரம் பணிகள் அதிகமாகவே செய்து முடித்துள்ளோம்.

தமிழக மின் வாரியம் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவிக்கிறது. கடனுக்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வட்டி கட்டப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை.

மின் நுகர்வோரின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைகளை சுட்டிக்காட்டும்போது அதை சீர்செய்ய வேண்டும். வெளிப்படை தன்மையுடன் மின்வாரியம் செயல்பட வேண்டும். ஆண்டு தோறும் மின்ஆளுமை விருதை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை சிறப்பாக செயல்படுவோருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in