Published : 02 Jul 2021 09:46 PM
Last Updated : 02 Jul 2021 09:46 PM

போலந்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு பார்சலில் வந்த உயிருள்ள சிலந்திகள்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்  

போலந்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு பார்சலில் வந்து உயிருள்ள சிலந்திகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அரிதான உயிரினங்கள் கடத்தி வரப்படலாம் என்ற ரகசியத் தகவல் வந்ததால், வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு போலந்தில் இருந்து வந்த பார்சல் ஒன்றை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்தனர்.

அருப்புக்கோட்டையில் வசிக்கும் நபர் ஒருவருக்கு அந்த பார்சல் வந்திருந்தது.

வெள்ளிக் காகிதம் மற்றும் பஞ்சால் சுற்றப்பட்ட 108 சிறு பிளாஸ்டிக் குப்பிகள் பார்சலுக்குள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்த போது, ஒவ்வொரு குப்பியிலும் உயிருள்ள சிலந்திகள் இருந்தன.

அவற்றை அடையாளம் காண்பதற்காக வன விலங்கு குற்ற கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும் இந்திய விலங்கியல் அமைப்பின் (தென் மண்டலம்) விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டனர்.

பார்சலில் இருந்த சிலந்திகள் தெற்கு, மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வாழும் டாரண்டுலாஸ் என்ற வகையை சேர்ந்த ஜீனஸ் போனோபெல்மா மற்றும் பிராச்சிபெல்மா என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

அவற்றின் இறக்குமதி சட்டத்திற்கு புறம்பானது என்பதாலும், வெளிநாட்டு வர்த்தக உரிமம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை என்பதாலும், சிலந்திகளை அவை எந்த நாட்டிலிருந்து வந்தனவோ, அங்கேயே அனுப்பி வைக்குமாறு விலங்கு தனிமைப்படுத்தல் அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

சுங்க சட்டம் 1962-ன் படி சிலந்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சிலந்திகளை கொண்ட பார்சல் போலந்திற்கு அனுப்பப்படுவதற்காக தபால் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக செய்திக் குறிப்பொன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x