

மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மதுரை மண்டல மின் விநியோகம், பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பி. மூர்த்தி பேசியதாவது:
”முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் இரவு, பகலாக உழைக்கிறார். அவரது கரோனா தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தேவையான மருத்துவ உபகரணங்கள் பெற்று, தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தில் கரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்கட்சியினர் நினைத்த நிலையில் முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார்.
மின்வாரிய அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற சில நாட்களில் சுந்தரமகாலிங்கம் கோயிலில் மின்சார வசதியை ஏற்படுத்தவேண்டும் என, தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளார். வனப்பகுதிக்கு சொந்தமான இடம் என்பதால் அத்துறையின் அனுமதியை பெற்று பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த காலத்தில் ஆண்டு ஒரு மின்மாற்றி அமைத்த நிலையில், தற்போது 15 நாட்களுக்குள் 15 மின்மாற்றிகள் மதுரை கிழக்கு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
10 ஆண்டில் மின்சார இயந்திரங்களில் எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகே பராமரிப்புப் பணி நடக்கிறது. இதன் மூலம் ஏற்படும் மின்தடையை எதிர்க்கட்சிகள் தவறாக சித்திரிக்கின்றன.
கடந்த ஆட்சி மின்மிகை மாநிலம் என, பெயரளவில் கூறி தக்கல் முறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கினர். ஓராண்டுக்குள் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என, மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இக்கல்லூரியின் தாளாளர் , ஆங்கில பத்திரிக்கை செய்தி ஒன்றை எங்களிடம் காட்டினார். இந்தியர்களை விமர்சனம் செய்யும் அந்த பத்திரிகையில், நமது முதல்வரை பாராட்டியுள்ளனர். 1,60,000 கோடி கடனில் இருக்கும் மின்சாரத்துறையை 6 மாதம் அல்லது ஓராண்டுக்குள் கடன் இல்லாத துறையாக மாற்றுவோம் என, மின்துறை அமைச்சர் பேரவையில் தெரிவித்து இருக்கிறார்” இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மின் உற்பத்தி, பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, ஆட்சியர் அனீஷ்சேகர் எம்பிக்கள் நவாஸ்கனி, வேலுச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.