ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக இடிக்கப்படுவதால் திருச்சி சிந்தாமணி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாற்றிடம் ஒதுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக இடிக்கப்படுவதால் திருச்சி சிந்தாமணி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாற்றிடம் ஒதுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சிந்தாமணி மார்க்கெட் இடிக்கப்படுவதால், இதுவரை தவறாமல் வாடகை செலுத்திய வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சிந்தாமணி மார்க்கெட் வியாபாரி ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி சிந்தாமணி மார்க்கெட்டில் மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை வைத்துள்ளேன். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.6 கோடியில் சிந்தாமணி மார்க்கெட் வணிக வளாகம் மற்றும் வாகன காப்பகம் கட்டப்படுகிறது. இதனால் கடைகளை காலி செய்ய ஸ்மார்ட் சிட்டி பணி மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை. கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேறும் வரை வியாபாரத்தை தொடர காவலர் குடியிருப்பு பகுதி, தண்ணீர் தொட்டி பகுதியில் மாற்று இடம் ஒதுக்க வேண்டும். அதுவரை எங்கள் கடைகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கக்கூடாது என்றும், மாற்று இடம் ஒதுக்கும் வரை தற்போதைய கடைகளை காலி செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் ஏராளமான வியாபாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பொதுமக்களுக்கு மட்டுமின்றி வியாபாரிகளுக்கும் பலன் கிடைக்கும். கரோனா கால நெருக்கடி சூழலில் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முறையாக வாடகை செலுத்தியவர்களுக்கு 15 நாளில் மாநகராட்சி தரப்பில் மாற்றிடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

அடுத்த 15 நாளில் அங்கிருந்து கடையை காலி செய்ய வேண்டும். உள்வாடகை விவகாரத்தில் மாநகராட்சி தரப்பிலேயே உரிய முடிவெடுக்க வேண்டும். வாடகை பாக்கியை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாதவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in