

புதுச்சேரிக்கான ரூ. 8500 கோடி கடனை தள்ளுபடி செய்யக்கோரி உள்துறை அமைச்சரிடம் மனுவை பேரவைத்தலைவர் மற்றும் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தந்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு புதுச்சேரிக்கு அமித்ஷா வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற பாஜக எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள், ஆதரவு தந்துள்ள சுயேட்சை எம்எல்ஏக்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினர்.
அத்துடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இரண்டாம் நாளாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அமித்ஷாவிடமும் பல முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பேரவைத்தலைவர் செல்வம் கூறுகையில், "மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடம் கட்ட நிதியுதவி, புதுச்சேரி மாநில கடன் தள்ளுபடி, மானியத்துடன் கூடிய நிதியுதவி, மாநில வளர்ச்சிக்கு தேவையான மத்திய அரசின் உதவிகளை செய்திட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தோம்” என்று குறிப்பிட்டார்.
டெல்லியிலிருந்து பாஜக சட்டப்பேரவைக் கட்சித்தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கூறுகையில், "பிரதமரிடம் தெரிவித்த அதே கோரிக்கைகளை உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்தோம்.
கரோனா நிவாரண நிதியாக ரூ.500 கோடி தேவை, புதுவை மாநிலத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.330 கோடி உடனே வழங்க வேண்டும்.
புதுவை மாநிலத்தின் ரூ. 8500 கோடி கடன்களை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும். புதுவை மாநிலத்தை நிதிக் கமிஷனில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். மாநிலத்திற்கு கடனாக வழங்கப்படும் தொகையினை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கலந்து ஆலோசித்தார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வரவுள்ளதாக தெரிவித்தார்" என்று குறிப்பிட்டார்.