

மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளரிடம் (நீதி) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை ஆயுத படை குடியிருப்பில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று கால சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி குழந்தைகள் கரோனா பாதிப்பால் இறந்தாக போலி ஆவணங்களை தயாரித்து அந்த குழந்தைகளை தனிநபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த குழந்தை விற்பனையை மருத்துவம் சார்ந்த தீவிர குற்றமாக கருத வேண்டும்.
சிவகுமார் பெயரளவில் முதியோர் இல்லத்தை நடத்தி அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை நம்ப வைத்து மாநில அரசிடமிருந்து விருது பெற்றுள்ளார்.
முதியோர், நலிவடைந்தோர், ஆதரவற்ற பெண்கள் மீட்பு மையம் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளை கடத்தி விற்பனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்புள்ளது. தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களிலும் குழந்தைகளை விற்பனை செய்திருக்க வாய்ப்புள்ளது.
காப்பக பதிவேடுகளில் 18 குழந்தைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இரு குழந்தைகள் மட்டும் இருந்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை உள்ளூர் போலீஸார் விசாரிப்பதில் சிரமம் உள்ளது. எனவே மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.