கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்: குண்டர் சட்டத்தில் கைது

திருப்பதி பாலாஜி.  
திருப்பதி பாலாஜி.  
Updated on
1 min read

திருவண்ணாமலையில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் திருப்பதி பாலாஜியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, பெரும்பாக்கம் சாலை எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன் (46). அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ஆதரவாளரான இவர், கட்டப்பஞ்சாயத்து, மண் மற்றும் மணல் கடத்தல், தொழிலதிபர்கள், நில வணிகர்கள் மற்றும் மக்களை மிரட்டிப் பணம் பறித்தல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல் உட்பட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இவர் மீது, திருவண்ணாமலை கிராமியக் காவல் நிலையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு குற்றச் சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், கிராமியக் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், கிழக்குக் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமத்தில், 38 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலை உள்ளிட்ட அரசு இடத்தில் இருந்து கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை கிராமியக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருப்பதி பாலாஜி கைது செய்யப்பட்டு போளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கட்டப்பஞ்சாயத்து மற்றும் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருப்பதி பாலாஜியின் நடவடிக்கையைத் தடுக்கும்பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, போளூர் கிளைச் சிறையில் இருந்த திருப்பதி பாலாஜியிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை கிராமியக் காவல்துறையினர் வழங்கி, வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in