

சென்னை போரூரில் 11 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்துத் தரைமட்டமானது. இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் இன்று (28.6.2014) மாலை இடிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்ற செய்தி அறிந்து மன வேதனை அடைந்தேன்.
இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, தக்க மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவினையடுத்து, மீட்புப் பணிகளை கண்காணிக்க ஏதுவாக, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர், இ.ஆ.ப., சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ். ஜார்ஜ், இ.கா.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கே. பாஸ்கரன், இ.ஆ.ப., ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுக்க ஏதுவாக, 12 தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், 12 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
எனது உத்தரவின் பேரில், மீட்புப் பணியை விரைந்து முடிக்க ஏதுவாக, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிடும் வகையில், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, சென்னை மெட்ரோ இரயில், சென்னை மாநகராட்சி ஆகியவற்றிலிருந்து தேவையான உபகரணங்களுடன் தொழில்நுட்ப பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
இரவு நேரங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தேவையான மின் விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.