Last Updated : 02 Jul, 2021 05:17 PM

 

Published : 02 Jul 2021 05:17 PM
Last Updated : 02 Jul 2021 05:17 PM

வாகனம் ஓட்டிக் காட்டாமல் உரிமம் பெறலாம்; மோட்டார் வாகன சட்டத்திருதத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

மதுரை

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி தாக்கலான மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மதுரையைச் சேர்ந்த ஜான்மார்டின், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019ன் 8ம் பிரிவில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் அங்கீகார விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தங்கள் நேற்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளுது.

இத்திருத்தத்தின் படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலர் முன்பு வாகனங்களை ஓட்டிக்காட்ட வேண்டியதில்லை. பயிற்சி முடிந்ததும் உரிமம் வழங்கப்படும்.

மோட்டார் வாகன சட்டத் திருத்தப்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்க வேண்டும், வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெற போதிய கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். நகர்ப்பகுதியில் 2 ஏக்கர் நிலம் கிடைப்பது எளிதல்ல.

மத்திய அரசின் சட்டத் திருத்தத்தால் இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக இயங்கி வரும் 4187, தமிழகத்தில் 1650 ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பாதிக்கப்படும். எனவே, ஓட்டுநர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் தொடர்பான மத்திய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் படித்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக்காட்ட வேண்டாம் என சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் உரிய பயிற்சி பெறாமல் குறுக்கு வழியில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதனால் முறையாக பயிற்சி பெறாத ஓட்டுநர்கள் உருவாகி விபத்துகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தற்போது சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களின் எண்ணிக்க அதிகமாக உள்ளது. இதனால் ஓட்டுநர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதனால் ஓட்டுநர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க சட்டத்திருத்தத்தில் கூறியிருப்பது போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன.

தற்போது ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதால் இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்றனர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டியதுள்ளது, அதற்காக விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x