

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததில், கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ சேதமடைந்தது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வடிகால்கள், கழிவு நீர்ச் சாக்கடைகள் நிரம்பி வழிந்தன. சாலைகள்தோறும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. காற்றும் வீசியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். பல்வேறு சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த மழையால் திருச்சி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் நிலவிய வெப்பம் தணிந்தது.
திருச்சி கிஆபெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர் பெரிய மிளகுப் பாறை பகுதியில் இடிந்து விழுந்ததில், அதனருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை ஆட்டோ சேதமடைந்தது.
திருச்சி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாத்தையங்கார்பேட்டையில் 75 மி.மீ. மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்:
விமான நிலையம் 70.40, திருச்சி ஜங்ஷன் 49, திருச்சி நகரம் 42, தென்பரநாடு 41, முசிறி 40, பொன்மலை 34.40, கொப்பம்பட்டி 28, சமயபுரம் 27.40, புள்ளம்பாடி 25.40, கல்லக்குடி 23.40, தேவிமங்கலம், மணப்பாறை தலா 23, துவாக்குடி 21.30, புலிவலம் 20, நவலூர் குட்டப்பட்டு 17, லால்குடி 13.20, கோவில்பட்டி 12.20.