தனியார் துறையில் இடஒதுக்கீடு கிடைக்க மோடியின் முயற்சி தேவை: கருணாநிதி

தனியார் துறையில் இடஒதுக்கீடு கிடைக்க மோடியின் முயற்சி தேவை: கருணாநிதி
Updated on
1 min read

தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்யும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தனியார் நிர்வாகத்தில் இயங்கும் பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அறக்கட்டளைகள் போன்ற நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி.) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் ஷகீல் உஸ்மான் அன்சாரி, ‘‘அரசு வேலைவாய்ப்புகள் கணிசமாக குறைந்து தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, தனியார் துறையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமல்லாது ஓ.பி.சி. பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் திமுக, இதே கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 2014 திமுக மக்களவைத் தேர்தல் அறிக்கையில், ‘‘பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுவே முழுமையான சமூக நீதியாகும். இத்தகைய இட ஒதுக்கீடு அமெரிக்க ஐக்கிய குடியரசில் நடைமுறையில் உள்ளது. எனவே, தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி), மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (எம்.பி.சி.) இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும்’’ என கூறப்பட்டுள்ளது.

திமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. நடைமுறைக்கேற்ற இந்த பரிந்துரையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in