புதுச்சேரி எம்எல்ஏ.,க்கள் தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல்: முதல்வர் ரங்கசாமி ரூ.6.5 லட்சம் செலவு

புதுச்சேரி எம்எல்ஏ.,க்கள் தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல்: முதல்வர் ரங்கசாமி ரூ.6.5 லட்சம் செலவு
Updated on
1 min read

புதுச்சேரியில் தேர்தலில் வென்ற எம்எல்ஏக்களில் குறைந்த அளவு செலவிட்டோரில் முதல் இரு இடங்களில் சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் ரூ. 2 லட்சம் மட்டுமே செலவிட்டதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். முதல்வர் ரங்கசாமி ரூ. 6.5 லட்சம் தேர்தலில் செலவிட்டதாக கணக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய அரசியலைப்பு சட்டம் 1951 பிரிவு 78ன் கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின கணக்கை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தேர்தல் முடிவு தொடர்பான அறிவிப்பு வந்த 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

புதுவையில் வெற்றி பெற்றுள்ள 30 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது செலவுக் கணக்கை தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ளனர். புதுவையில் ஒரு வேட்பாளர் தேர்தல் செலவு ரூ 22 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவு செலவு செய்தோர்:

புதுச்சேரியில் மிகவும் குறைந்த அளவாக செலவு செய்துள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளோரில் உழவர்கரையில் வென்ற சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கர் ரூ. 2.17 லட்சம் செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2வதாக முத்தியால்பேட்டில் வென்ற சுயேட்சை எம்எல்ஏ பிரகாஷ் குமார் ரூ. 2.46 லட்சம் செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 3வது இடத்தில் உப்பளத்தில் வென்ற திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி ரூ. 3.08 லட்சமும் தாக்கல் செய்துள்ளார். 4வது இடத்தில் ஏம்பலம் தொகுதியில் வென்ற என்ஆர்காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி காந்தனும், 5வது இடத்தில் கதிர்காமம் தொகுதியில் வென்ற என்ஆர்காங்கிரஸ் எம்எல்ஏ கேஎஸ்பி ரமேஷும் உள்ளனர்.

அதே போல் அதிகபட்ச செலவு செய்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ திருமுருகன் உள்ளார். இவர் செலவிட்ட தொகை ரூ.15.47 லட்சம் ஆகும். அடுத்து 2வதாக காலாப்பட்டு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ரூ.14.5 லட்சம், ஏனாம் சுயேட்சை எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ரூ.13.8 லட்சம் என கணக்கில் தெரிவித்துள்ளனர்.

முதல்வரான ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் ரூ 6 லட்சத்து 50 ஆயிரமும், பேரவைத்தலைவர் செல்வம் ரூ 12.97 லட்சமும், அமைச்சர் நமச்சிவாயம் ரூ 6.16 லட்சம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ரூ 6.45 லட்சமும், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ரூ 5 லட்சமும், அமைச்சர் சந்திரபிரியங்கா ரூ 7.27 லட்சமும், அமைச்சர் சாய் சரவணன் ரூ 6.78 லட்சம் செலவிட்டுள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in