

கோவை மாநகரக் காவல்துறையில் உள்ள துணை ஆணையர் முதல் காவலர்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரக் காவல்துறை நிர்வாகம், காவல் ஆணையர் தலைமையில் செயல்படுகிறது. 4 துணை ஆணையர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். வழக்கமான பணிகளான ரோந்துப் பணி, விசாரணை, குற்றத் தடுப்புப் பணி போன்றவற்றில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கண்ட பணிகளுடன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பரவலைத் தடுக்கப் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். தொடர்ச்சியாகக் கண்காணிப்புப் பணி, விசாரணைப் பணி போன்வற்றில் ஓய்வின்றிப் பணியாற்றுவதால், காவல் துறையினருக்குப் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. காவலர்களுக்கு வார விடுமுறையும் அளிக்கப்படாமல் இருந்தது.
இதுதொடர்பான விவரம், மாநகரக் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, துணை ஆணையர் முதல் காவலர்கள் வரையில் உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க, காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாநகரக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘காவல் ஆணையரின் உத்தரவைத் தொடர்ந்து, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சுழற்சி முறையில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வார விடுமுறை தயார் செய்யப்பட்டு, மாதத்தில் 4 நாட்கள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு துணை ஆணையர்கள் சனிக்கிழமை விடுப்பு எடுத்தால், 2 துணை ஆணையர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு எடுத்துக் கொள்ளும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் உள்ள அதிகாரிகளின் பணியை, அன்று பணியில் உள்ள அதே ரேங்க் உடைய அதிகாரிகள் கூடுதலாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட அதிகாரிகளுக்கு, காவல் ஆணையர் அலுவலகம் மூலம் விடுமுறை ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் உள்ள உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரையிலானவர்களுக்கு, விடுமுறை அளிக்கும் தினத்தை அந்தந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளர்கள் தீர்மானித்து வழங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வார விடுமுறைத் திட்டம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. தவிர, முன்னரே காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.