திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள மல்லிகைப்பூக்கள். 
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள மல்லிகைப்பூக்கள். 

விற்பனை இல்லாததால் வாசனைத் திரவியம் தயாரிக்க அனுப்பப்படும்  மல்லிகைப் பூக்கள்

Published on

நிலக்கோட்டை பகுதியில் மல்லிகைப்பூ விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சம் டன் பூக்கள் வாசனைத் திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், நிலக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடி அதிகளவில் உள்ளது. கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பூ விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பூக்களைப் பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் மூன்றாயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பூக்கள் வரத்து இருந்தாலும் தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக விற்பனை மந்த நிலையிலேயே இருந்தது.

தற்போது மல்லிகை சாகுபடிக்கேற்ப மழையின்றி அளவான வெயில் நிலவுவதால் செடிகளில் பூக்கள் அதிகம் பூக்கத் தொடங்கியுள்ளன. ஒரு ஏக்கருக்கு 150 கிலோ முதல் 200 கிலோ வரையிலான பூக்களை பூ விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.

இதனால் திண்டுக்கல், நிலக்கோட்டை நகரங்களில் உள்ள பூ மார்க்கெட்டிற்குப் பூக்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூக்கள் குவிக்கப்பட்டு வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் குறைந்ததன் காரணமாக விற்பனை பாதிப்பு ஏற்பட்டு வியாபாரிகளும் குறைந்த அளவிலான மல்லிகைப் பூக்களையே வாங்கிச் செல்கின்றனர்.

மீதமுள்ள பூக்கள் வாசனைத் திரவிய தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கு ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்துப் பூ ஏற்றுமதியாளர் முருகேசன் கூறுகையில், ’’நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் கிலோ வரை மல்லிகைப் பூக்களை விவசாயிகள் மார்க்கெட்டிற்குக் கொண்டு வருகின்றனர். பூ வியாபாரிகள் வாங்கிச் சென்றதுபோக மீதமுள்ள மல்லிகைப் பூக்களை நிலக்கோட்டை, மேட்டுப்பாளையம் மருதூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் செயல்படும் தனியார் வாசனைத் திரவிய தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கிறோம்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கிலோ மல்லிகைப் பூக்கள் வாசனைத் திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில தினங்களுக்குப் பூக்களின் வரத்து அதிகரிக்கும் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அளவில் மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in