

கரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினர் அதிக அளவில் உயிரிழந்ததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கான அறிவிப்பை மத்திய,மாநில அரசுகள் வெளியிட்ட போதிலும் அதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் பயனாளிகளை தலைசுற்ற வைக்கிறது.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை மிகவும் மோசமான சூழலை ஏற்படுத்தியது. குறிப்பாக மே மாதத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கரோனா மிகஉச்சத்தில் இருந்தது. ஆக்சிஜன்வசதிக்காகவும், மருத்துவமனையில் படுக்கைக்காகவும் நோயாளிகள் வாசலிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கரோனா சிகிச்சையின்போதே மாரடைப்பு ஏற்பட்டு அதிகளவில் இளம்வயதினர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், ஒருவரை மட்டும் இழந்த பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தக் குழந்தைகளின் கல்விக்கும் அரசு வழிவகை செய்துள்ளது.
ஆனால் இந்த சலுகையைப் பெறுவதற்கான பட்டியலை மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் அரசு பெறுகிறது. அதே நேரம் இந்த சலுகைகளைப் பெறுவதற்கு அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்தில் வறுமைக்கோடு பட்டியல் என எதுவும் வரையறுக்கப்படவில்லை. அந்த வகையில் கரோனாவால் பெற்றோரை இழந்து வறுமைக்கோடு பட்டியலில் இல்லாத குடும்பங்களை, வறுமைக்கோடு பட்டியலுக்குள் இணைத்து அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கச் சொல்கின்றனர்.
வறுமைக்கோடு பட்டியலில் ஒருவரது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றால் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலே நடைபெறாத நிலையில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் புதிதாக வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்கமுடியவில்லை. கரோனாவால் உயிர் இழந்த குடும்பத்தினரை வறுமைக்கோடு பட்டியலில்இணைத்து சான்றிதழ் வழங்குவதில் அரசு முறையான அறிவிப்பாணை கொடுக்காததால் ஊராட்சிசெயலாளர்களும் தங்கள் கையொப்பமிட்டு இந்த சான்றிதழ் வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஒரு குடும்பத்தின் தலைவர் உயிரிழக்கும்போது அந்தக் குடும்பத்தினருக்கு வேறு வருமானம் இல்லாத நிலையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே தான் அவர்களின்பொருளாதாரம் தள்ளப்படும். அது குடும்பத் தலைவர் உயிரோடுஇருந்தபோது இருந்த பொருளாதாரத்தில் இருந்து பாதாள நிலைக்குதள்ளப்படும். ஆனால் கரோனா வால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடுவழங்க, குடும்பம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்திருப்பதால் பயனாளிகளால் உரிய சான்றிதழை பெற முடியவில்லை.
தமிழகத்தில் 3,000 குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அதிகபட்சம் சில நூறு கோடிதான் ஆகும். ஆனால் அரசு அந்தஇழப்பீடைப் பெறுவதற்கு வைத்திருக்கும் கடும் நிபந்தனைகள், கரோனாவால் உறவுகளை இழந்தோரை தவிக்க வைக்கிறது. அரசுஇந்த நடைமுறையை எளிமைப்படுத்த முன்வர வேண்டும் என்பதே கரோனாவால் உறவுகளை இழந்தோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.