Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: நிபுணர்கள் வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். கர்நாடக அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ‘காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்போம், மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்’ என்ற முழக்கங்களை முன்வைத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது.இதற்கான விளக்கப் பிரசுரம் வெளியீட்டு நிகழ்ச்சி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. விளக்கப் பிரசுரத்தை ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன் வெளியிட, நீரியல் வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர் பாரி பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

பி.ஆர்.பாண்டியன்: காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுவதை தடுப்பதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

சுந்தர்ராஜன்: மேகேதாட்டு அணை கட்டினால், நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தானாக வரும் 80 டிஎம்சி தண்ணீர் வராமல் போய்விடும். இந்த ஆபத்தை கருத்தில் கொண்டு, கர்நாடகா அணை கட்டுவதை காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் தடுக்க வேண்டும்.

ஜனகராஜன்: மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் விவசாயம்பாதிப்பதுடன், ஒரு கோடி மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கமுடியாமலும் போய்விடும். மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து கர்நாடக சட்டப்பேரவையில் விவாதித்ததுடன், ரூ.9 ஆயிரம் கோடிஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x