அரசு திட்டங்களை எல்இடி வாகனம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்: அதிகாரிகளுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

அரசு திட்டங்களை எல்இடி வாகனம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்: அதிகாரிகளுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்
Updated on
1 min read

அரசின் திட்டங்கள், அறிவிப்புகளை எல்இடி வாகனம் உள்ளிட்டநவீன உபகரணங்களை பயன்படுத்தி மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது:

அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.

துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவகங்கள், மணிமண்டபங்கள், நினைவுத் தூண்கள் இருக்கும் இடத்தை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அந்த இடங்களுக்கு முன்பு 5 கி.மீ. மற்றும் 1 கி.மீ. தூரங்களில் அந்தஇடங்கள் குறித்த அறிவிப்பு பலகைகளை நெடுஞ்சாலைகள், முக்கியசாலைகளில் அமைக்க வேண்டும். தலைவர்களின் அரிய புகைப்படங்களை ஆவணக் காப்பகங்கள் மற்றும் அறிஞர்களிடம் பெற்று, மணிமண்டபங்களில் வைத்து காட்சிப்படுத்தலாம்.

அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் நினைவு மண்டபங்கள்,மணிமண்டபங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள்,காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த கருத்துருக்களை தலைமையிடத்துக்கு விரைந்து அனுப்ப வேண்டும். நினைவு மண்டபங்கள், மணிமண்டபங்களை பராமரிக்க அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகளின் உதவியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நினைவு மண்டபம், மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறாமல் இருந்தால் இயக்குநர், செயலர் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். கட்டிமுடிவடையும் நிலையில் உள்ளவற்றை விரைந்து கட்டி முடித்துமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

அரசின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் தந்துஅதை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள், அறிவிப்புகளை நமது துறையில் உள்ள எல்இடி வாகனம் போன்ற நவீன உபகரணங்கள் மற்றும் நமது அனுபவத்தையும் பயன்படுத்தி, முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி,செய்தி துறை செயலர் மகேசன் காசிராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in