

நீலகிரி மாவட்டத்தில் உதகை அருகே நஞ்சநாடு, கேத்தி பாலாடா ஆகிய பகுதிகளில் அதிகளவு கேரட்பயிரிடப்படுகிறது. கேரட் அறுவடை பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடு கின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தையில் காலை 10.30 மணிக்குள் கேரட் ஏலம் விடப்படுகிறது. இதற்காக, அதிகாலை 2 மணியளவில் தொழிலாளர்களை கேரட் தோட்டங்களுக்கு அறுவடைக்கு அழைத்துச் செல்கின்றனர். விடிவதற்குள் லாரிகளில் ஏற்றிகேரட் கழுவும் இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு,கேரட்டை முழுமையாக கழுவிய பின், தரம் பிரிக்கப்பட்டு மூட்டைகளில் நிரப்பி காலை 8 மணிக்கு முன்னதாக உதகையிலிருந்து லாரிகளில் ஏற்றி, காலை 10 மணிக்குள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.
நள்ளிரவில் பெற்றோர் அறுவடை பணிக்கு செல்வதால், குழந்தைகள் பாதுகாப்பின்றி வீடுகளில் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
தூக்கமின்மையால் விபத்துகள்
இது ஒருபுறமிருக்க, தூக்கமின்மை காரணமாக விபத்துகளும் நிகழ்கின்றன. கேரட் ஏற்றி செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, அதில் பயணிக்கும் தொழிலாளர் கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், உதகையில் நிலவும் குளிர் காரணமாக, பணிக்குசெல்பவர்கள் குளிரை போக்கவும், உடல் வலியை போக்கவும்மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரைஊதியம் வழங்கப்படுவதால், அதில் பாதி அளவு மதுவுக்கு செலவிடுகின்றனர். இதனால், கேரட் அறுவடை நேரத்தை மாற்றவேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் மண்டியில் கேரட் கொள்முதல் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று (ஜூலை 2) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக கேத்தி பாலாடாவை சேர்ந்த கேரட் விவசாயி ஹரிஹரன் கூறும்போது, “மேட்டுப்பாளையம் மண்டியில் காலையில் நடைபெற்று வந்த கேரட்ஏலம் மதியம் 2 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், உதகையில் கேரட் அறுவடை தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இனிமேல், விடிந்த பிறகு அறுவடைக்கு சென்றால் போதும். இதன்மூலமாக, குடும்பம் மற்றும் குழந்தைகளை தொழிலாளர்கள் கவனிக்க முடியும். அவர்களுடன் நேரத்தை செலவழிக்க முடியும்.இந்த நேர மாற்றம் வரவேற்கத்தக் கது’ என்றார்.