கோப்புப்படம்
கோப்புப்படம்

5 ஆண்டுகளாக இலங்கை சிறையிலிருக்கும் என் கணவரை இந்திய சிறைக்கு மாற்றுங்கள்: உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கு

Published on

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி 5 ஆண்டுகளாக இலங்கை சிறையில் இருந்து வரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபரை இந்திய சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த மெஹ்ருனிஷா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் ரிபாயுதீன் மீது 2013-ல் போதை பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016-ல் என் கணவரை போலீஸார் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். அவரை இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றக்கோரி இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடும் என் கணவரை இந்திய சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in