Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM

பெரம்பலூர் அருகே சாத்தனூரில் உள்ள தொன்மைவாய்ந்த கல்மரப் பூங்காவை மேம்படுத்தி சுற்றுலா மையமாக்க வேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பெரம்பலூர் அருகே சாத்தனூரில் உள்ள தொன்மையான கல் மரப்பூங்காவை மேம்படுத்தி, தமிழக அரசு சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் சாத்தனூரில் 12 கோடி ஆண்டுகள் பழமையானது என கணிக்கப்படும் தொன்மையான கல்மரப் படிமம் உள்ளது. பூக்காத தாவர வகையைச் சேர்ந்த இந்த மரப் படிமம் ஒருகாலத்தில் கடலால் மூழ்கடிக்கப்பட்டு படிமம் ஆகியதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த கல் மரத்தை இந்திய புவியியல் துறை தேசிய கல் மரப் பூங்காவாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. இந்த கல் மரப் பூங்காவை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புவியியலாளர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் இங்கு பல லட்சம் ரூபாய் செலவில் பயணியர் மாளிகை, அருங்காட்சியகம் ஆகியவை கட்டப்பட்டன. பின்னர், கடந்த ஆட்சியில் ரூ.20 லட்சம் செலவில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இவை இன்னும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. மேலும், பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் தொல்படிமங்கள் தேசிய கல்மரப்பூங்கா வளாகத்தின் ஒரு அறையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘இந்த கல் மரப்பூங்காவை சுற்றுலா மையமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அருங்காட்சியகத்தை உடனே திறந்து அதில் தொல் படிமங்களை தேவையான விவரக்குறிப்புகளுடன் காட்சிப்படுத்த வேண்டும்.

மேலும், தொல் படிமங்களின் தொன்மை, வரலாறு, அவை உருவாகும்விதம் குறித்து விளக்கும் ஒளி, ஒலி காட்சிக் கூடம் அமைக்க வேண்டும், அரசுப் பள்ளி மாணவர்களை இங்கு கல்விச் சுற்றுலா அழைத்து வர வேண்டும். சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் சிலருக்கு தொல்லியல் படிமங்களின் வரலாறு குறித்து குறுகிய கால பயிற்சியளித்து, அவர்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு விளக்கிக் கூறும் ஊதியத்துடன் கூடிய பணியை வழங்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  வெங்கட பிரியா கூறியதாவது; தேசிய கல் மரப் பூங்காவில் பயணியர் மாளிகையை மாற்றியமைத்து தொல்லியல் எச்சங்கள் குறித்த பல்வேறு தகவல்களை படங்களுடன் விளக்கும் காட்சிக்கூடம் அமைக்கப்படும். தேசிய கல் மரப்பூங்கா மக்களை கவரும்வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு வெகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும். கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அங்கு சுற்றுலா வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x