மனநலம் குன்றி சாலையில் திரிபவர்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் காவல் துறை

மனநலம் குன்றி சாலையில் திரிபவர்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் காவல் துறை
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் மனநலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக பொறுப்பேற்ற பாலகிருஷ்ணன் அண்மையில் காவல் துறையினருக்கு பல்வேறு புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

அப்போது, மனநலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிபவர்களை மீட்டு, உரிய காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதற்காக காவல் ஆய்வாளர்களை நியமித்து கூடுதல் பொறுப்புகளை வழங்கினார்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அழகம்மாள், வல்லம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று தஞ்சாவூரில் டான்டெக்ஸ் ரவுண்டானா, பழைய ஹவுசிங் யூனிட், சச்சிதானந்த மூப்பனார் சாலை, பெரிய கோயில் ஆகிய இடங்களில் மனநலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிந்த 3 ஆண்கள், ஒரு பெண் ஆகிய 4 பேரை மீட்டு, தஞ்சாவூர் அன்பாலயம் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மனநலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சாலையில் திரிபவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

பெரம்பலூரில்...

இதேபோல, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ் தலைமையில், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் அசீம் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், பெரம்பலூர் நகரம், கிருஷ்ணாபுரம், வெங்கனூர் ஆகிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு, ஆதரவின்றி சுற்றித்திரிந்த 6 பேரை நேற்று மீட்டு, பெரம்பலூரில் உள்ள வேலா கருணை இல்லத்தில் சேர்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in