

காரைக்கால் நகரப் பகுதியில் அரசலாறு அமைந்துள்ளது. இந்த அரசலாற்றின் பாலத்துக்கு மேற்கே ஆற்றங்கரையையொட்டி, விழிதியூர் செல்லும் சாலையில் 1.5 கி.மீ தொலைவுக்கு கான்கிரீட் தடுப்புடன் கூடிய நடைமேடை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
காரைக்கால் தெற்கு தொகுதியின் அப்போதைய எம்எல்ஏ வி.கே.கணபதியின் முயற்சியால், மத்திய அரசின் சுற்றுலாத் துறை நிதி மூலமாக ரூ.5 கோடி செலவில் மக்களின் நடைபயிற்சி, பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றுக்காக இந்த நடைமேடை அமைக்கப்பட்டது.
ஆனால், அப்பகுதியில் ஒரு மதுக்கடை இருந்ததால், பொதுமக்கள் அங்கு செல்லவே அச்சமடைந்ததால், நடைமேடை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.
இந்நிலையில், தற்போது இந்த நடைமேடை மக்களுக்கு பயனற்ற நிலையில் முட்புதர்களும், சீமைக் கருவேல மரங்களும் மண்டிக்கிடக்கின்றன. ஆங்காங்கே, மதுபாட்டில்கள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. கோடிக்கணக்கான தொகை செலவு செய்து வீணாகிக் கிடப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ வி.கே.கணபதி கூறியது:
இந்த நடைமேடை அமைந்துள்ள பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றினால் மட்டுமே மக்கள் அச்சமின்றி நடைமேடையை பயன்படுத்த முடியும். இதுகுறித்து அப்போதே புதுச்சேரி சட்டப்பேரவையிலும் பேசி, வெளிநடப்பு செய்துள்ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்குள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்து, நடைபாதையில் உள்ள புதர்களை அகற்றி சீரமைத்து, ஆங்காங்கே மக்கள் அமரும் வகையில் இருக்கைகளை அமைத்து, சிறிது காலத்துக்கு காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.
காரைக்கால் வளர்ச்சிக்குழு துணைத் தலைவர் க.புத்திசிகாமணி கூறியது:
இந்த நடைமேடையில் ஏற்கெனவே மக்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் இருக்கைகளை தற்போது காணவில்லை. பாதை முழுவதும் புதர்கள் மண்டி, மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு பலர் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாகிவிட்டது. சமூக விரோத செயல்கள் நடப்பதற்கும் ஏதுவாக உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் அவ்வழியே விழிதியூருக்குச் செல்லும் மக்கள் பயத்துடனேயே செல்கின்றனர். எனவே, புதுச்சேரி அரசு இதுகுறித்து கவனம் செலுத்தி, புதர்களை அகற்றி, மின் விளக்குகளை எரியச் செய்து, மக்கள் பயன்படுத்த ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பின்னர், காரைக்கால் நகராட்சி மூலம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றார்.