Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM

சேரன்மகாதேவி குறித்த அரிய தகவல்களுடன் கல்வெட்டு கண்டுபிடிப்பு: ராசேந்திர சோழன் ஆட்சி காலத்தை சேர்ந்தது

சேரன்மகாதேவியில் உள்ள சோழர்கால கல்வெட்டு.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ராமசாமி கோயிலில் பழமையான கல்வெட்டு இருப்பதாக திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. மைய இயக்குநர் இ.மாரியப்பன், சேரன்மகாதேவி தமிழ் பேரவை செயலாளர் பாலு தலைமையிலான குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். மேலும், அந்த கல்வெட்டு குறித்து மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சொ.சாந்தலிங்கத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த கல்வெட்டில் உள்ள வாசகம் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக மாரியப்பன் கூறியதாவது:

இக் கோயில் பாண்டிய மன்ன ரான பராந்தக வீரநாராயணனால் (கி.பி.863-904) கட்டப்பட்டது. கோயிலில் உள்ள வட்டெழுத்து கல்வெட்டுகள் சோழர் காலத்தில் வெட்டுவிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. கல்வெட்டானது கோயில் கருவறை அதிட்டானத்தில் உருளை வடிவ கல்லில் எழுதப்பட்டுள்ளது. ராசராச சோழன் மகன் ராசேந்திர சோழன் ( 1012-1044) மூன்றாவது ஆட்சி காலத்தில், அதாவது 1015-ம் ஆண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் இக்கல்வெட்டு ஆயிரத்து ஆறு ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது. கல்வெட்டில் ஊரின் பெயர் முள்ளிநாட்டு பிரம்ம தேயமான சோழ நிகரிலி சதுர்வேதி மங்கலம் என்றும், இறைவனை நிகரிலி சோழ விண்ணகர உடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலுக்கு நந்தாவிளக்கு தானமாக கொடுக்கப்பட்டு, அதனை எரிக்க நெய்யும் தானம் வழங்கப்பட்ட செய்தி கல்வெட்டில் உள்ளது. விளக்கில் ஆழாக்கு நெய்யினை முட்டாமல் அதாவது அளவுக்கு அதிகமாக ஊற்றாமல் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x