

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை தள்ளுபடி செய்தது.
சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 31-ம் தேதி (இன்று) திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் நடைபெறவுள்ளது. கல்வி நிறுவன வளாகத்தில் இக்கூட்டம் நடைபெறவிருப்பது சட்டவிரோதமானது. அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கும் எதிரானது. எனவே அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் சிவஇளங்கோ ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு மனுக்களையும் அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த கூட்டத்துக்காக அதிமுகவினர் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் பேனர்களுக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? அதை வைத்தவர்கள் யார்?, நடைபாதையை மீறி அந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனவா? என்பன குறித்த விரிவான தகவல்களை வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் அரசு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.