வேலூர் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் பணியாற்றிய 90 தற்காலிக செவிலியர்கள் திடீர் பணி நீக்கம்: இரண்டு மாதம் சம்பளம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த 90 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர். இதனால், மீண்டும் பணி வழங்க வேண்டும் என கூறி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த 90 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர். இதனால், மீண்டும் பணி வழங்க வேண்டும் என கூறி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்ற நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் அரசு மருத்துவமனைகளில் மருத்து வர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, தற்காலிக அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களுக்கு தினசரி ரூ.444 வீதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் வார்டில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களின் சேவை நிறுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 90 செவிலியர்களையும் பணிக்கு வரவேண்டாம் என திடீரென கூறியுள்ளனர். அவர்களுக்கு, வழங்க வேண்டிய இரண்டு மாத ஊதியமும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்தனர். அவர் களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதுடன் செவிலியர்கள் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் மட்டும் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். நீண்ட நேர காத்திருப் புக்குப் பிறகு ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட செவிலியர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் ஏற்கெனவே பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்து வந்தோம். கரோனா சிகிச்சை வார்டுகளில் வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப் பட்டதும் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 444 ரூபாய் ஊதியத்துக்கு தற்காலிகமாக பணியில் சேர்ந்தோம். திடீரென வேலை இல்லை எனக்கூறி அனுப்பிவிட்டனர். இரண்டு மாதம் சம்பளமும் வழங்கவில்லை. இந்த வேலையை நம்பி தனியார் மருத்துவமனை வேலையும் போய் விட்டது. எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். இரண்டு மாத சம்பளத்தையும் தர வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in