உயர்நீதிமன்றம் உத்தரவுபடி ரூ.1 கோடி மதிப்பிலான இடம் மீட்பு: நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே உயர்நீதிமன்றம் உத்தரவுபடி ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று மீட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் புதூர், கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 40 சென்ட் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு கட்டப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து, தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்பிமணியம், உதவி பொறியாளர் பூபாலன் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், காவல்துறையின் பாதுகாப்புடன் ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை நேற்று அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறும்போது, “ராஜகோபால் மூலம் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்கப்படும்” என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in