Published : 01 Jul 2021 06:26 PM
Last Updated : 01 Jul 2021 06:26 PM

நினைவு மண்டபங்கள், மணிமண்டபங்களை விரைந்து கட்டி முடிக்கவும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

அமைச்சர் சாமிநாதன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

சென்னை

நினைவு மண்டபங்கள், மணிமண்டபங்கள் போன்றவற்றை விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இன்று (ஜூலை 01) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூறியதாவது:

"தமிழக முதல்வரின் தலைமையில் செயல்படும் இந்த அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களைச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் கொண்டு சேர்த்து அவர்கள் பயன்பெறும் வகையில் தங்களது பணியைத் திறமையாகச் செய்ய வேண்டும். மேலும், அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையால் வெளியிடப்படும் தமிழரசு இதழின் சந்தாக்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்களின் நலத்திட்ட உதவிகள் குறித்த விண்ணப்பங்களைத் தாமதப்படுத்தாமல் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைந்து கிடைத்திட, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை விரைந்து அனுப்பி வைக்கவும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவகங்கள், மணிமண்டபங்கள், நினைவுத் தூண்கள் போன்றவை இருக்கும் இடத்தினை எளிதில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவ்விடங்களுக்கு முன்பு 5 கிலோமீட்டர் மற்றும் 1 கிலோமீட்டர் தூரங்களில் அவ்விடங்கள் இருப்பது குறித்த அறிவிப்புப் பலகைகளை நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து பயன்பெறும் வகையில், தலைவர்களின் அரிய புகைப்படங்களை ஆவணக்காப்பகங்கள் மற்றும் அறிஞர்களிடம் பெற்று, மணிமண்டபங்களில் வைத்துக் காட்சிப்படுத்தலாம்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் நினைவு மண்டபங்கள் மற்றும் மணிமண்டபங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்த கருத்துருக்களை விரைந்து தலைமையிடத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

நாட்டுக்காக உழைத்த நல்லோர் மற்றும் தமிழறிஞர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது, சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் பிரதிநிதிகள், அத்தலைவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து முன்கூட்டியே தெரிவித்து, அவ்விழாவினைக் கொண்டாடினால் அத்தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள், பொதுமக்களும் பாராட்டுவார்கள்.

நினைவு மண்டபங்கள்/மணிமண்டபங்கள் போன்றவற்றைப் பராமரிப்பதற்கு அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அரசு சாரா அமைப்புகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பினைப் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

நினைவு மண்டபம் மற்றும் மணிமண்டபம் அமைக்கப்பட்டுத் திறப்பு விழா நடைபெறாமல் இருப்பவை குறித்து இயக்குநர் மற்றும் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். மேலும், கட்டி முடிவடையும் நிலையில் உள்ள நினைவு மண்டபங்கள், மணிமண்டபங்கள் போன்றவற்றை விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வரின் தலைமையிலான அரசின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை நமது துறையில் உள்ள எல்இடி வாகனம் போன்ற நவீன உபகரணங்கள் மற்றும் நமது அனுபவத்தையும் பயன்படுத்தி, முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். உங்களுக்குக் கிடைத்துள்ள அரசுப் பணி செய்யும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கும் அரசுக்கும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x