

ஈஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.64 கோடி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவை இன்று (ஜூலை 1) நேரில் சந்தித்து அவர் பேசினார். அப்போது,
"புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, குரும்பூரில் செயல்பட்டுவந்த ஈஐடி பாரி எனும் தனியார் சர்க்கரை ஆலை கடந்த 2019-ம் ஆண்டு கரும்பு அரவையை நிறுத்திவிட்டது.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.64 கோடி அளவிலான நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இத்தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஈஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு பகுதிகளை தஞ்சாவூரில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு மாற்றித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்கு 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தனியாரிடம் அதிக விலை கொடுத்து குடிநீரை பெற வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, கீரனூர் பகுதிக்கு குறைந்தது 2 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.