Published : 01 Jul 2021 01:59 PM
Last Updated : 01 Jul 2021 01:59 PM

சமையல் கியாஸ் ரூ.25 உயர்வு ஏழைகளை பாதிக்கும்; ஜிஎஸ்டி வரிதான் விலை உயர்வுக்கு காரணம்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது ஏழைகளை பாதிக்கும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 01) வெளியிட்ட அறிக்கை:

"மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஐந்தாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இதுவரை ரூ.825-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அதன் விலை ரூ.850 ஆக உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் எரிவாயு விலை 2021-ம் ஆண்டில் மட்டும் ஐந்து தவணைகளில் ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு விலை ரூ.710 என்ற அளவில் தான் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4-ம் தேதி ரூ.25, 15-ம் தேதி ரூ.50, 25-ம் தேதி ரூ.25 என மொத்தம் ரூ.100 உயர்த்தப்பட்டது.

அதன்பின்னர் மார்ச் ஒன்றாம் தேதியும், ஜூலை ஒன்றாம் தேதியான இன்றும் முறையே ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளன. இடையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி மட்டும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. சமையல் எரிவாயு விலை 5 மாதங்களில் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டிருப்பதை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

ஒருபுறம் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் அதன் மீதான மானியம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு மே மாதம் சமையல் எரிவாயு விலை மீதான மானியம் சிலிண்டருக்கு 243.98 ரூபாயாக இருந்தது.

அது படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின், கடந்த சில வாரங்களாகத் தான் ரூ.24.95 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சமையல் எரிவாயு மீதான மானியம் சுமார் 90% குறைக்கப்பட்டு விட்டது.

மற்றொருபுறம் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 406 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 110 விழுக்காடு உயர்ந்து ரூ.850 என்ற புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. இது மக்களை கடுமையாக பாதிக்கும்.

வழக்கமாக மானிய சமையல் எரிவாயு விலை உயரும் போது அது மக்கள் மீது சுமத்தப்படாது. விலை உயர்வுக்கு இணையாக மத்திய அரசின் மானியம் உயர்த்தப்படும் என்பதால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இப்போது மானியத்தின் அளவு மிகக்கடுமையாக குறைக்கப்பட்டு விட்டதால், சமையல் எரிவாயு விலை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஒரு காலத்தில் சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாகக் கருதிய மத்திய அரசு, அதன்மீது எந்த வரியும் விதிக்கவில்லை. முழுமையான வரிவிலக்கு அளித்ததுடன், பெருந்தொகையை மானியமாக வழங்கியது. அதனால் தான் ஏழைகளும் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நிலைக்கு உயர்ந்தனர்.

சுற்றுச்சூழலை காக்கவும், பெண்களின் சுமையைக் குறைத்து, உடல்நலத்தை பாதுகாக்கவும் இது மிகவும் அவசியமாகும். ஆனால், இப்போது சமையல் எரிவாயு மீதான மானியம் குறைக்கப்பட்டு, 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இது தான் சமையல் எரிவாயு விலை உயர்வுக்குக் காரணமாகும்.

சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அதை உணர்ந்து, மத்திய அரசும், மாநில அரசும் சமையல் எரிவாயு சிலிண்டர் மீது கூடுதல் மானியம் வழங்கி, சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x