

இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக
இன்று உலக மருத்துவர் நாள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக 24 மணி நேரமும் உழைத்து, கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகின்றார்கள். அவர்களுக்கு மதிமுகவின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினார்கள். அந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர், மருத்துவரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ராமதாஸ், நிறுவனர், பாமக
அன்னை, தந்தை, ஆசிரியர், கடவுள் வரிசையில் கடவுளுக்கு முன்பாக வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். தங்களை வருத்திக் கொண்டு மக்களைக் காத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
அன்புமணி ராமதாஸ், இளைஞரணித் தலைவர், பாமக
இன்று தேசிய மருத்துவர்கள் நாள். தன்னலமற்ற சேவை செய்வதில் முன்னோடிகள். கரோனா அரக்கனிடமிருந்து கோடிக்கணக்கான மக்களைக் காத்த கடவுள்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு மருத்துவராக எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழக அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்த போது அவற்றை மு.க.ஸ்டாலினும் ஆதரித்தார். முதல்வராகிவிட்ட நிலையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும்!