

விஐபி மொபைல் நம்பர் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.43 கோடி வரை மோசடி செய்த நபரை அகமதாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், விஐபி மொபைல் நம்பர் வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் ஒருநபர் ரூ.1.43 கோடி வரை மோசடி செய்ததாக, சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார்.
இதன் பேரில் நகரின் நவா வடாஜ் பகுதியைச் சேர்ந்த துருவில் என்பவரை செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளில் இவரிடம் புகார்தாரர் ரூ.1.43 கோடி வரை கொடுத்துள்ளார். இதற்கு மொபைல் நம்பர் மற்றும் அதற்கான ரசீதை துருவில் கொடுத்துள்ளார். கூடுதல் தொகை என்று கூறி ரூ.11 லட்சத்தை துருவில் திருப்பிக் கொடுத்து, புகார்தாரரின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
இதனால் சிம் கார்டு வந்து சேரும் என நம்பிக்கையுடன் காத்திருந்த புகார்தாரர், பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸாரை அணுகியுள்ளார். விசாரணையில் துருவில் வங்கிக் கணக்கில் ரூ.1.40 கோடி இருப்பதை கண்டறிந்த போலீஸார் அத்தொகையை கைப்பற்றியுள்ளனர். துருவில் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.