Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM

ஆவினில் முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை: பால்வளத் துறை அமைச்சர் நாசர் உறுதி

சென்னை

ஆவினில் நடைபெற்ற முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

ஆவின் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் நாசர் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், தஞ்சாவூர் மாவட்டங்கள், மாவட்ட இணையம் ஆகியவற்றில் உள்ள ஆவின் ஒன்றியங்களில் முறைகேடாக 236 பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 176 முதுநிலை உதவியாளர்கள் இடங்கள், 138 தொழில்நுட்ப பணியிடங்கள் நிரப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பணி நியமனங்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணை நடத்துவதற்கான ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து அதன் அறிக்கை ஒரு வாரத்துக்குள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்.

சாக்லேட், பிஸ்கட், பால் பவுடர் உள்ளிட்ட 152 பொருட்களை துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்டநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினசரி பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக தற்போது 1.5 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் தினசரி 12 லட்சம் லிட்டராக இருந்த ஆவின்பால், 14 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x