Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM

தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்: சென்னை ஐஐடி-க்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் சென்னை ஐஐடி போன்ற நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ஐஐடியில் இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீடுஉருவாக்கப்பட்டுள்ளது. அதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று பார்வையிட்டார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தீவிரவாதம், மனித சமூகத்தின் எதிரியாக செயல்படுகிறது. ராணுவ ரேடார்களால் கண்டறிய முடியாத வகையில், தாழ்வாக பறக்கும் ட்ரோன்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் தீர்வுகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் ஐஐடி போன்ற நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீடு திட்டத்தை இணைந்து உருவாக்கிய சென்னை ஐஐடி மற்றும் புதிய நிறுவனமான த்வஸ்தா மேனுஃபேக்சரிங் சொல்யூஷன்ஸ் குழுவினரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பாரம்பரிய உற்பத்தி நடைமுறைகளை மாற்றும் செயல்திறன் கொண்ட முப்பரிமாண அச்சு மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பங்களின் கலவையை உள்ளடக்கிய 4-வது தொழில் புரட்சியின் சாதகமான பலன்களை இந்தத் திட்டம் வெளிப்படுத்துகிறது.

கட்டுமான பணியில் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம், ஒருவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலான வடிவமைப்பை வழங்குவதோடு, மனித தலையீட்டையும் குறைக்கிறது. இந்தியாவில் வீடுகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடுகளை கட்டமைக்கும் லட்சியத்தை நிறைவேற்றவும் இதுபோன்ற மேலும் பல தொழில்நுட்பப் புதுமைகளை உருவாக்க வேண்டும்.

ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு நம் நாட்டை தயார்படுத்த வேண்டும். தனது அதிநவீன ஆராய்ச்சி பூங்கா மூலம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சென்னை ஐஐடியின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x