Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM

தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலேயே கரோனா தடுப்பூசி அனுப்புகிறது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார்

சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்கிலிருந்து 2.50 லட்சம் கோவிட் 19 தடுப்பூசிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பெற்றுக்கொண்டார். உடன், அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். படம்: பு.க.பிரவீன்

சென்னை

சென்னை பெரியமேட்டில் உள்ளமத்திய அரசின் மருந்து கிடங்கிலிருந்து 2.50 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பெற்றுக் கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தடுப்பூசி இல்லாத நிலையில், மத்திய அரசிடம் முதல்வர் பேசி வந்தார். இதைத்தொடர்ந்து பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்கில் இருந்து 2.50 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக ஹைதராபாத், புனே போன்ற பகுதிகளில் இருந்துதான் சென்னைக்கு தடுப்பூசி வரும். ஆனால் அவசரத்துக்கு இங்குள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதால், துறையின் அலுவலர்கள் இங்கிருந்து தடுப்பூசிகளை எடுத்து தமிழகம் முழுவதும் அனுப்புவதற்கான பணிகளை செய்துள்ளனர்.

இதுவரை 1 கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. 1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 494 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஒட்டு மொத்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் 42 லட்சம் தடுப்பூசிகள் வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாக கூடுதலாக மத்திய அரசு 4 லட்சம் தடுப்பூசிகளை கொடுத்தது. தற்போது 2.5 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை 71 லட்சம் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 7 முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் போடும் அளவுக்கு நிர்வாக கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் மத்திய அரசிடம் இருந்து குறைந்த அளவிலே தடுப்பூசிகள் வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x