

கோவை மாவட்டத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டும், ஆர்டர்கள் வராத காரணத்தால் பெரும்பாலான சிறு, குறு நிறுவனங்களில் உற்பத்தி தொடங்கவில்லை.
கரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீதம் பணியாளர்களுடனும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. பெரும்பான்மையான சிறு, குறு நிறுவனங்களில் உற்பத்தி தொடங்கவில்லை. பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெற்றன. இதற்கு அந்நிறுவனங்கள் வசம் ஆர்டர்கள் எதுவும் உடனடியாக வரவில்லை என்பதே முக்கிய காரணம் என்கின்றனர், தொழில் துறையினர்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:
ஏற்கெனவே ஊரடங்கு காலத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் அதனை சார்ந்த, அத்தியாவசிய உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு பிரச்சினையில்லை. அவர்கள் தங்கள் கையிருப்பில் உள்ள ஆர்டர்கள், மூலப்பொருட்களை வைத்து செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
தற்போது அரசு அனுமதித்த பிறகு தொழில் நிறுவங்களை திறக்கும் நிறுவனங்கள் முதலில் ஆர்டர்களை கைப்பற்ற வேண்டும். அதற்கு பிறகு தேவையான மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது 10 பேரில் 3 பேர் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படும்போது, உற்பத்தி திறன் குறைவு அங்கிருந்தே தொடங்கிவிடுகிறது.
இத்தகைய உற்பத்தி திறன் பாதிப்பு ஒரு பெரிய நிறுவனத்தின் ஆர்டர்களை சார்ந்துள்ள சிறு, குறு நிறுவனங்களை நிச்சயமாக பாதிக்கும். அந்த நிலைதான் தற்போது நிலவி வருகிறது. தொழில் நிறுவனங்களை திறந்தும் ஆர்டர்களுக்காக காத்திருக்கும் நிலைதான் உள்ளது. சிறு,குறு நிறுவனங்களில் உற்பத்தி தொடங்கப்படவில்லை. அடுத்துவரும் ஒரு வாரத்துக்கு இதே நிலை தான் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.