கூட்டுறவு வங்கி பணிக்கு தேர்வாகி பணி நியமன ஆணை கிடைக்காததால் நேற்றும் போராட்டம்

கூட்டுறவு வங்கி பணிக்கு தேர்வாகி பணி நியமன ஆணை கிடைக்காததால் நேற்றும் போராட்டம்
Updated on
1 min read

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு தேர்வாகி நியமன ஆணை கிடைக்காதவர்கள் நேற்றும் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு கடந்த ஆண்டு முறையான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரை முடிந்த நிலையில் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே, தேர்தல் நடத்தை விதிகளால் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. எனவே, இதுதொடர்பாக பலமுறை கூட்டுறவுத் துறை அதிகாரிகளை பார்த்த அவர்கள் கடந்த 23-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரை சந்தித்தினர்.

ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் நேற்று வரை நடவடிக்கை நிலுவையிலேயே இருந்து வந்தது. எனவே, நேற்று மீண்டும் ஆட்சியரை பார்க்க ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் ஆட்சியர் வேறு பணியாக சென்றிருந்ததால் நீண்ட நேரம் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரேணுகா அவர்களிடம் நேரில் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர், ‘நிர்வாக ரீதியான காரணங்களால் பணி நியமன ஆணை வழங்குவதில் தாமதம் நிலவுகிறது. அதிகபட்சம் 10 நாட்களுக்குள் பணி ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் சற்று நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in