

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை- காஞ்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது
மழை வெள்ளத்தால் சென்னை - காஞ்சி மண்டலத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வணிகர்களைப் பற்றி அரசு அக்கறை கொள்ள வில்லை. வெள்ளத்தின்போது பால் உள்ளி்ட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்ளை லாபத்துக்கு விற்றவர்கள் வணிகர்களே அல்ல. அவர்கள் இடைத்தரகர்கள்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மதிப்பு கூடுதல் வரியாக ரூ. 60 ஆயிரம் கோடி செலுத்தி வருகிறோம். அதில் ஒரு சதவீதத்தை வணிகர்களுக்கு இழப்பீடாக தரவேண்டும். மின்சாரம், வணிகவரி ரிட்டன், கல்விக்கட்டண வசூலிப்பை 3 மாதத்துக்கு ஒத்திப்போட வேண்டும். வங்கிகள் மூலம் ரூ.5 லட்சம் வட்டியில்லாக் கடனாக வழங்க வேண்டும். டோல்கேட்டுகளில் 6 மாதத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் பிரதமரை விரைவில் சந்திக்கவுள்ளோம்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.