ராமநாதபுரத்துக்கு ‘முகவை’ என்று பெயர் ஏற்பட காரணம்: தொல்லியல் ஆய்வாளர் தகவல்

வே. ராஜகுரு
வே. ராஜகுரு
Updated on
1 min read

ராமநாதபுரத்துக்கு முன்பு ‘முகவை' என்ற பெயர் ஏற்படக் காரணம் தொடர்பாக அரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

முற்காலத்தில் ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக நெல் விளையும் இடமாக இருந்துள்ளன. அச்சமயத்தில், நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததால், ராமநாத புரத்துக்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து ஆய்வு செய்த அவர் மேலும் கூறியதாவது:

புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இலக்கி யங்களில் குறிப்பிடப்படும் முகவை எனும் சொல்லுக்கு அள்ளுதல், நெற்பொலி என பல பொருட்கள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் முகவைப் பாட்டு, நெல் கதிரடிக்கும் இடத்தில் பாடப்படும் பாட்டு ஆகும். எனவே முகவை என்ற சொல்லை நெல்லுடன் தொடர்புடையதாக கொள்ளலாம்.

நெல்லைக் குறிக்கும் ஊர்கள்

ராமநாதபுரம் எனும் ஊர் உருவாவதற்கு முன்பு, இப்பகுதி நெல் கதிரடிக்கும் பொட்டலாக இருந்ததால் முகவை எனப் பெயர் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சுற்றிலும் நெல்லை நினைவுபடுத்தும் சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை, களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் முதலிய ஊர்கள் உள்ளன. மேலும் கிழவன் சேதுபதி காலத்தில் இப்பகுதியில் தோண்டப்பட்ட ஊருணி முகவை ஊருணி என அழைக்கப்படுகிறது.

கி.பி. 1711-ல் அவர் வழங்கிய செப்பேட்டில், ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் இருக்குமிடமும் முகவை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

கி.பி.1601-ல் சேதுபதிகள் ஆட்சிக்கு வரும் முன்பே ராமநாதபுரம் என்னும் ஊர் இருந் துள்ளது. கி.பி.1607-ல் திருமலை உடையான் சேதுபதி வழங்கிய செப்பேட்டில் ராமநாதபுரம் எனும் ஊர் முதன்முதலில் குறிப்பிடப் படுகிறது. சேதுபதிகளுக்கு முன்பே விஜயநகர, நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், முகவைப் பகுதியில், ஊர் உருவாக்கப்பட்டபோது ராமநாதபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in