

வைகை ஆற்றின் இருகரையிலும் நான்கு வழிச்சாலை அமைக்கப் படும் நிலையில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அகற்றாததால் ஆற்றின் இருபுற மும் முழுமையாக சாலை அமைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சியும் இணைந்து வைகை ஆற்றின் இருபுறமும் ரூ.384 கோடியில் 50 அடி அகலத்துக்கு பிரம்மாண்ட நான்கு வழிச்சாலையை அமைத்து வருகின்றன. ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்கெனவே பலர் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி விட்டனர். ஆட்சியாளர்கள் கவனக்குறைவால் தற்போது அவர்கள் அந்த ஆக்கிரமிப்பு நிலத்துக்கு நிரந்தரப் பட்டாவும் வாங்கி விட்டனர். அதனால் ஆற்றின் இரு கரைகளிலும் திட்டமிட்டவாறு சாலைகளை தொடர்ச்சியாக போட முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது: தென்கரை சாலையில் ராஜா மில் ரோடு பாலம், புட்டுத்தோப்பு, விளாங்குடி பாலம், வடகரையில் தத்தனேரி பாலம், செல்லூர் எல்ஐசி பாலம் உள்ளிட்ட சில இடங்களில் இணைப்புச் சாலைகள் இல்லை. ஆழ்வார்புரம், ஓபுளா படித்துறை, வண்டியூர் பாலம், குருவிக்காரன் சாலை பாலம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இந்தச் சாலை முழுமையடையாது.
நகருக்குள் நெரிசலை குறைக்க இந்தச் சாலையை அமைப்பதாக மாநகராட்சி கூறுகிறது. ஆனால் இச்சாலையை முழுமையாக அமைக்க ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி வரும். அதற்கு மாநகராட்சி நிர்வாகம் தயங்கி வருவதால் எந்த நோக்கத்துக்காக இந்தச் சாலை அமைப்பதாகச் சொல் கிறார்களோ, அது நிறைவேறாமல் வாகனங்கள் நகர்ப்பகுதிக்குள் மீண்டும் வந்து செல்லும் நிலை தான் உருவாகும். அதனால் மீண் டும் போக்குவரத்து நெரிசல் நகர்ப் பகுதியில் அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது.
தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அவசரக் கோலத்தில் சாலை அமைப்பதால் ஆறு சுருங்கிவிட்டதுதான் மிச்சம். ஆற்றங்கரையோரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் நட்ட நூற்றுக் கணக்கான மரங்களை பொதுப் பணித்துறை அகற்றியது. ஆனால் ஆற்றுக்குள் இருக்கும் கருவேல மரங்களையும், தனியார் ஆக்கிரமி ப்புகளையும் அகற்றுவதில்லை’’ என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வைகை ஆற்றுப் பாலங்கள் கட்டுமானப் பணி முடிந்ததும் விடுபட்ட இடங்களில் சாலை முழு மையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சாலைப்பணி இன்னும் நிறைவடையவில்லை,’’ என்றார்.