சிம்புவை கைது செய்ய கோரி மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

சிம்புவை கைது செய்ய கோரி மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

'பீப் பாடல்' விவகாரம் தொடர்பாக சிம்புவை கைது செய்ய வேண்டும் என்று கோரி, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிம்பு, அனிருத் இருவரும் ‘பீப்’ என்ற பாடலை இணையதளத்தில் வெளி யிட்டதாகக் கூறப்பட்டது. அதில், பெண்களை ஆபாசமாக சித்தரித் துள்ள வார்த்தைகள் இருந்ததாகக் கூறி பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், இணையத்தில் பாடல் வெளியிடப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸாரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அனிருத் "அப்பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை, பாடவும் இல்லை" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று தி.நகரில் இருக்கும் சிம்பு வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய மாணவர் கூட்டமைப்பினர் நடத்தினார்கள். அப்போது, சிம்பு புகைப்படத்தையும் தீயிட்டு கொழுத்தினார்கள். இதனால் சிம்பு வீடு இருக்கும் தெருவில் போலீஸார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அப்போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன் கூறியதாவது, "அனிருத் இசையில் சிம்பு பாடியிருக்கும் இப்பாடல் ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கும் இழிவுப்படுத்துவதாகும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளில் இறங்கி நடிகர்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வேளையில் குப்பையான இப்பாடல் வெளியாகிறது. காவல்துறை தற்போது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள், விரைவில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போரட்டத்தை நடத்தினோம். இனிமேல் இது போன்று சமூகத்துக்கு எதிராக சமூகப் பொறுப்பற்று நடக்கக்கூடாது என இந்திய மாணவர் சங்கம் கண்டிக்கிறது" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in