

வந்தவாசி அருகே பொன்னூரில் நெற்களம் அமைக்க பள்ளம் தோண்டியபோது கிடைத்த பழமையான சிவலிங்கத்தை மீட்ட பொதுமக்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள பொன்னூர் கிராமத்தில் நெற்களம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ‘பொக்லைன்’ இயந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணி நேற்று முன்தினம் நடை பெற்றது. அப்போது, மண்ணில் சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. இதையடுத்து, அந்த சிலையை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். சுமார் மூன்றரை அடி உயரமுள்ள சிவலிங்கத்தின் பீடம் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த தகவலை அடுத்து பொன்னூர் கிராம மக்கள் விரைந்து சென்று சிலையை வழிபட்டு சென்றனர்.
இந்த தகவலறிந்த பொன்னூர் ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி செல்வம், ஒன்றிய கவுன்சிலர் கெம்புராஜ் ஆகியோர் வந்தவாசி வட்டாட்சியர் திருநாவுக்கரசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பொன்னூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வட்டாட்சியர் திருநாவுக்கரசு நேற்று ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் எதிர்ப்பு
மேலும், திருவண்ணாமலை அரசு அருங்காட்சியகத்துக்கு சிலையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இந்த சிலையை அருகே உள்ள சாந்தநாயகி உடனுறை திருக்காமேஸ்வரர் கோயில் அருகே வைத்து வழிபட ஏற்பாடு செய்துள்ளனர்.