மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களின் துயரம் போக்க வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களின் துயரம் போக்க வேண்டும்: வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் துயரங்களைப் போக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மழையினால் இயல்பு வாழ்க்கை திரும்பாத சூழலில், தற்போது மீண்டும் பெய்துள்ள கனமழை காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகள், உடைமைகளை முற்றிலுமாக இழந்துள்ளனர்.

இந்த சூழலில் தமிழக அரசின் அனைத்து இயந்திரங்களும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, தங்கும் வசதி ஆகியவற்றை இயல்பு நிலை திரும்பும் வரை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். தொற்று நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தடுப்பு ஊசி, தேவையான மருந்துகளை போதிய அளவு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மீட்பு பணிகளில் தமிழக அரசுக்கு உதவும் வகையில் போதுமான அளவுக்கு இராணுவம், கப்பற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழு போன்றவற்றை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். இடைக்கால நிவாரண நிதியை மத்திய அரசு உடனே தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதற்கிடையே மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே, பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மழை பெய்துள்ளதால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை களைய மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றினைந்து செயல்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும்.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விபத்து போன்றவற்றில் சிக்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து தர வேண்டும். மீட்பு பணிகளுக்கு அனைவரும் உதவியாக இருக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in