

கரோனா பரவல் முழுமையாக முடியட்டும், தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக நிச்சயம் வந்து அனைவரையும் நேரில் சந்திப்பேன் என ஆம்பூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணியிடம் சசிகலா பேசியுள்ள ஆடியோ இன்று வெளியாகி உள்ளது.
அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கட்சித் தொண்டர்களிடம் தொலைபேசியில் உரையாடி வருகிறார்.
அவருடன் பேசுவோர்களைப் பட்டியலிலும் அதிமுக தலைமை, அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறது.
அதேநேரத்தில், சசிகலாவுடன் அதிமுகவினர் யாரும் பேசக்கூடாது, மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனk கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதையும் மீறி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் சசிகலா தொடந்து பேசி வருகிறார்.
இந்நிலையில், ஆம்பூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் அணிக்குச் சென்றதால் அவர் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார்.
அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் அமமுக சார்பில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியைத் தழுவியதால் கடந்த தேர்தலில் அவர் போட்டியிடாமல், கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட அமமுக மாவட்டச்செயலாளரும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பாலசுப்பிரமணியிடம் சசிகலா தொலைபேசி மூலம் பேசியுள்ள ஆடியோ இன்று வெளியானது.
அந்த ஆடியோவில் சசிகலா பேசும்போது, ‘என்னிடம் பேசி வரும் தொண்டர்கள் அனைவரும் என்னை நேரில் சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது கரோனா பரவல் இருப்பதால் 50 பேருக்கு மேல் ஒன்றுசேரக்கூடாது என்பதால் நான் பொறுமையாக உள்ளேன். கரோனா பரவல் முழுமையாக முடியட்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் தொகுதி வாரியாக நானே நேரில் வர உள்ளேன்.
அப்போது உங்களை (பாலசுப்பிரமணியம்) நேரில் சந்திக்கிறேன். கட்சியைச் சரி செய்து விடலாம். கட்சி காப்பாற்றப்படும், கவலை வேண்டாம். உடல் நலனையும் குடும்பத்தாரையும் பார்த்துக்கொள்ளுங்கள் விரைவில் நான் வருவேன்.’’
இவ்வாறு அந்த ஆடியோவில் சசிகலா பேசியுள்ளார். இதைக்கேட்ட அமமுக தொண்டர்கள், அதிமுகவினர் சிலர் உற்சாகமடைந்துள்ளனர்.